Sunday, November 25, 2012

உதிர வாயில்

உதிர வாயில் - கதைச்சுருக்கம்

 காட்சி 1.

பார்த்திபன் , நேஹா இருவரும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள். நட்புக்கும் காதலுக்கும் நடுவில் பழகி கொண்டிருப்பவர்கள். பார்த்திபனுக்கு நேஹா எப்போதும் ஆச்சர்யம் தான். நேஹா லண்டனில் பிறந்து வளர்ந்து ஆராய்ச்சி நோக்கில் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் வெளிநாட்டு பெண். ஆனால் தமிழ் சுத்தமாக பேச தெரிந்தவள். இலக்கண இலக்கிய அறிவோடு கூடவே ஆராய்ச்சி அறிவும் கொண்டவள். அவளுக்கு தமிழும் அதன் தொன்மையும், அதன் அறிவியலும் தான் ஆச்சர்யம். அதை விட ஆச்சர்யம் தமிழர்களுக்கு இந்த ஆவலும் ஆச்சரியமும் அறிவும் இல்லையே என்பது தான்.

பார்த்திபனுக்கு ஒரு செப்பேடு கிடைக்கிறது. அதை பற்றி நேஹாவுடன் விவாதிக்கிறான். நேஹா அதன் நுட்பம் உணர்ந்து ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்ளுவோம் என்கிறாள்.

காட்சி 2.

வேலம்மாள் தன் கணவன் பொன்னுச்சாமியை நினைத்து நொந்து கொள்கிறாள். தன் ஒரே பெண்ணுக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது அதற்கு ஒரு திருமணம் செய்து வைத்து பேரப் பிள்ளைகளை பார்க்க ஆசை கொள்கிறாள். இவன் சகோதரர்கள் எல்லோரும் இவனை ஏமாற்றி விளைச்சலுக்கு ஆகாத நிலத்தை இவன் தலையில் கட்டிவிட்டனர் என்ற ஆதங்கம் ஒரு புறம். தினமும் சண்டை தான்.

ஒரு நாள் சண்டை போட்டுவிட்டு தன் நிலத்தை எதாவது செய்ய முடியுமா என்று பார்க்க கிளம்புகிறான். அவனின் நிலத்தில் வட கிழக்கு மூலையில் ஒரு  இடிந்த நிலையில் மண்சுவர் மேடு இருந்தது. அதை அகற்றி சமப்படுத்தி விட்டால் நிலத்தை உழுவதற்கு வசதியாக இருக்கும் என்று ஆட்களை சேர்த்துக்கொண்டு வேலை செய்கிறான். அவர்களுக்கு மண் மேட்டை அகற்றிய பிறகு ஒரு செப்பு பானை கிடைக்கிறது. பானையில் இருந்த மண் சுண்ணாம்பை அகற்றும் போது ஒரு தங்க நாணயம் கிடைக்கிறது. கூடவே செப்போலையும் சிதைந்த நிலையில் கிடைக்கிறது. இன்னும் சில தங்க நாணயங்கள் இருப்பது போல சத்தம் கேட்கிறது. ஆனால் பானையில் உள்ள மண், பாறை போல இறுகி போல இறுகி இருப்பதால் எடுக்க முடியவில்லை.

விஷயம் வி ஓ க்கு சென்று அவர் மூலம் தாசில்தார் வரை பரவி பானையை கைப்பற்றுகிறார்கள்

காட்சி 3.

பார்த்திபனுக்கு கிடைத்த செப்பேடுவை ஆராயும் போது பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள சில கிராமங்களை குறிக்கிறது. எனவே அந்த கிராமங்களை நோக்கி பயணிக்கிறார்கள். வழியில் ஒரு சித்தரை சந்திக்கிறார்கள். ஒரு பெரும் சவால் உங்களுக்கு காத்துகொண்டிருக்கிறது. உயிருக்கு ஆபத்து விளையலாம். சகுனங்களை புரிந்துகொண்டு சாமர்த்தியமாய் செல்லப் பழகுங்கள் என்கிறார்.

காட்சி 4.

வி.ஓ பக்கத்து கிராமத்திற்கு பைக்கில் நண்பருடன் செல்லும் போது ஒரு மரக்கிளை ஒடிந்து வயிற்றில் செருகி இறக்கிறார். ஆனால் நண்பருக்கு எதுவும் ஆகவில்லை.

வி.ஓ மனைவி வீட்டில் துணி துவைக்கும் போது ஆறு தங்க நாணயங்களை கண்டு ஆச்சர்யம் அடைகிறார். ஒருவன் தலைதெறிக்க ஓடிவந்து "அம்மா, நம்ம ஐயா .. என்று சொல்லி விசும்புகிறான்.


காட்சி 5.

தாசில்தாரும் அலுவலக கணக்கரும் அந்த பானையின் உள்ளே இருக்கும் இறுகிய மண் பகுதியை உடைக்கிறார்கள். டு தங்க காசுகள் இருக்கிறது. எண்ணப் படும்போது தாசில்தாருக்கு தெரியாமல் இரண்டை ஒழித்து வைத்து கொள்கிறார் அந்த கணக்கர். பிறகு சீல் வைக்கப்பட்டு பத்திரபடுத்துகிரார்கள்.

அலுவலர் வீடு செல்லும் போது இரும்பு தகடு செல்லும் லாரிக்கு பின்னே வண்டியில் செல்லும் போது தகடில் ஒன்று நழுவி அவரது தலை துண்டாகிறது

காட்சி 6

பார்த்திபன் நேஹா ஊருக்குள் வருகிறார்கள். அந்த ஊர் கோயில் பட்டயத்தை
கண்டுபிடித்து பார்க்கும் போது அவர்களுக்கு அவர்கள் கையில் இருக்கும் செப்பெட்டின் முழு அர்த்தமும் விளங்குகிறது. அந்த சமயத்தில் அவர்களுக்கு நடந்த இரு துர் மரணங்களை பற்றியும், செப்பு பானை குறித்த தகவலும் கிடைக்கிறது.

காட்சி 7

இவர்கள் தேடி வந்ததும், அங்கு நடந்ததிற்கும் உள்ள தொடர்பு புரிகிறது. உடனே அவர்கள் அந்த ஊர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரிடம் சென்று " அந்த பானை ஒரு சபிக்கப்பட்ட பொருள் என்றும் , அதன் மீது ஆசைகொண்டவர் அனைவரும் துர் மரணம் ஏற்பட்டு இறப்பார்கள் என்றும், ஊரே  நோய்நொடியில் விழுந்து அழிந்து போகும் என்றும், அதற்கு ஒரே பரிகாரம் பானையை கைபற்றி செப்பு பானையை இருந்த இடத்தில் வைத்து விடுவது தான் என்றும் சொல்கிறார்கள்.

காட்சி 8

தாசில்தார் சென்ற ஜீப் ஒரு லாரியுடன் மோதி சின்னா பின்னமாகி சிதைந்து இருக்கிறது. ஓட்டி வந்த டிரைவர் பிழைத்து கொண்டார். அவரை சப் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார்.

தாசில்தார் உடலை போஸ்ட்மார்டம் செய்த பிறகு அவரது உடமையில் ஒரு தங்க நாணயம் கிடைக்கிறது.

காட்சி 9

சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் நேஹா வை சந்திக்கிறார். மீண்டும் விசாரிக்கிறார். அப்போது நேஹா " இப்போது அந்த தங்க நாணயங்கள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறாள். இறந்தர்வர்களிடம் இருந்து கைபர்ரியது மற்றும் அந்த செப்பு பானை எல்லாம் எங்களது போலீஸ் ஸ்டேஷன் - இல் தான் இருக்கிறது என்று சொல்ல , " உடனே அதனை அங்கிருந்து அகற்றி , மனிதர் அல்லாத இடத்தில் புதைத்து வையுங்கள் " என்கிறாள் . சப் இன்ஸ்பெக்டர் அதை ஏற்க மறுக்கிறார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்திருந்த சாராய கேன்கள் பற்றி எரிந்து மொத்த ஸ்டேஷனும் எரிந்து சாம்பலாகி விட்டது என்று.


காட்சி 10

மொத்த ஸ்டேஷனும் எரிந்தாலும் யாருக்கும் ஆபத்தில்லை. இதற்குமேல் விவாதிக்காமல் எரிந்த சாம்பலில் இருந்து அந்த தங்க நாணயங்களை கைபற்றிட வேண்டும் என்று எல்லோரும் பதட்டத்துடன் விரைகிறார்கள்.

இவர்கள் சென்ற போது தீயணைப்பு வீரர்கள் தீயை  விட்டு அணைத்து விட்டு செல்கிறார்கள். மிஞ்சிய பொருள்களை இன்ஸ்பெக்டர் தேடிப்பார்கிறார். செப்பு பானை கிடைக்கிறது. ஆனால் தனியே கைபற்றிய தங்க நாணயங்களை காணவில்லை. எவ்வளவு அலசியும் கிடைக்க வில்லை.

பார்த்திபன் ஆறுதல் படுத்துகிறான் " ஒரு நாள் பொறுங்கள் சார். அதுவே தான் எங்கிருக்கிறது என்று காட்டி விடும்" என்று.

காட்சி 11

பார்த்திபன் சொன்னது போலவே நடந்தது. தீயணைப்பு வண்டி கட்டுபாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியதாக செய்தி வருகிறது. அதில் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

அவர்களிடம் சென்று விசாரித்ததில் கருகிய நிலையில் சில காசுகள் கிடைத்ததாகவும் , தாங்கள் அதை தங்கம் என்று எண்ணவில்லை என்றும் எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வாய்த்த தாகவும் சொல்கிறார்கள்.

காட்சி 12

இதை மறுபடியும் தோண்டிய இடத்தில் வைப்பதில் உள்ள சட்ட சிக்கல்களை சப் இன்ஸ்பெக்டர் சொல்கிறார். அதனால் ஏன் இந்த சாபம் , இதன் வரலாறு என்ன என்று கூற வேண்டும் என்று அவர் கேட்கிறார். பார்த்திபனும் நேஹாவும் தங்களிடம் இருந்த செப்பு தகடை ஆராய்ந்தும், கோயில் பட்டயத்தையும் வைத்தும் கதை சொல்கிறார்கள்.

காட்சி 13

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பெண் துறவிக்கு நேர்ந்த அவலம் மற்றும் அவள் கொண்ட கோபம் தான் அது. சோழர்கள் வேங்கி நாட்டின் மீது படை எடுக்கும் போது வழியில் கண்ட ஊர்களை எல்லாம் சூறையாடி சென்றார்கள். அவ்வழியே வந்த கோதை என்ற பெண் துறவியிடம் படை வீரர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்கள். அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அப்பெண் வீரன் ஒருவனின் வாள் ஒன்றை உருவி கற்பை காத்துக்கொள்ள தன்னை தானே வெட்டிக் கொன்றாள். சாகும் முன் " உங்கள் அத்தனை பேரையும் மட்டுமல்ல நீதிக்கு புறம்பாய் மக்களை துன்புறுத்தும் அனைவரையும் கொல்லாமல்  என் ஆன்மா அழியாது " என்று சபித்துவிட்டு இறந்தாள் .  

அவள் சொன்னவாறே சோழ சிங்காதனத்தில் இருந்த இரக்கமற்று மக்களை கொன்ற படை வீரர்களும், தளபதிகளும், தன அதிகாரிகளும், அரச குடும்பத்தில் சிலரும் அடுத்தடுத்து துர்மரணம் கொண்டார்கள். இதற்கு முடிவு கட்டும்விதமாக சோழ ராஜன் ஆண்மிகவாதிகளையும், மாந்த்ரிகர்களையும் ஆலோசனை செய்தான் . மாந்த்ரிகத்தால் கோதை நாச்சியார் ஆன்மாவை கட்டுபடுத்த ஒரு புறமும், படை எடுப்பில் மக்களை துன்புறுத்த கூடாது என்ற சட்டத்தையும்  முயற்சி செய்தான். 

அதன் படி ஆறு கோணங்களை கொண்ட நட்சத்திர வடிவில் ஆறு இடத்தில் கோதைக்கு கோவில் எழுப்பி, ஒவ்வொரு கோவிலின் அடியில் ஆயிரத்தெட்டு பொற்காசுகளையும், நவ தானியங்களையும், சாப விபரம் அடங்கிய செப்பு தகட்டையும் சேர்த்து புதைத்து வைத்தான்.  

காட்சி 14

இதையெல்லாம் கேட்ட இன்ஸ்பெக்டர் ஆச்சர்யத்தில் மூழ்கி இருந்தார்.  "அப்போ இதே போல இன்னும் ஐந்து இடங்களில் பொற்காசுகள் இருக்க வாய்ப்பிருக்கா"  என்ற கேள்வியும் கேட்டார். நிச்சயமாக இருக்க வேண்டும் என்றே நேஹா பதில் சொன்னாள். "அப்போ இன்னும் ஐந்து இடங்களையும் கண்டுபிடித்து அவற்றிற்கும் எந்த சேதாரம் இன்றி பாதுகாக்க வேண்டுமா.." என்றார். நிச்சயமாக என்று நேஹா பதில் சொன்னாள். இதை தான் கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதை என்பார்கள் என்றான் பார்த்திபன்.

காட்சி 15 - காட்சி 25

சஸ்பென்ஸ்





No comments: